செய்திகள்
கட்சிக் கொடி பிரச்சனை.. மாவீரன் படத்திற்கு சிக்கல்? – சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு பதிவு!
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் நாளை ஜூலை 14ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், பெங்களூரு, ஹைதராபாத், மலேசியா மற்றும் துபாய் என்று பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தான் நடித்துவரும் 21வது திரைப்பட பணிகளை கவனித்துக்கொண்டே, பிரமோஷன் பணிகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் திரை வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் மிஸ்க்கின், அதிதி ஷங்கர், மூத்த நடிகை சரிதா, யோகி பாபு, மூத்த நடிகர் சுனில் மற்றும் குரல் வழியே இணைந்துள்ள மக்கள் செல்வர் விஜய் சேதுபதி என்று பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் இந்த படத்தில் மிஸ்க்கின் நடித்துள்ள காட்சிகளில் தங்கள் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்காமல் படத்தை வெளியிடக்கூடாது என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி இதில் எந்த அரசியல் கட்சியை குறித்தும் குறிப்பிடவில்லை என்றும் படத்தில் மொத்தம் 40 வினாடிகள் பொறுப்பு துறப்பு வெளியிட்டால் போதும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பிரதிபலிக்குமாறு காட்சிகள் இருப்பின் அவற்றை பிரதிபலிக்காதவாறு படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார்.
