செய்திகள்
விஜய் மக்கள் இயக்கம்.. நிர்வாகிகளுடன் நடந்த கூட்டம் எதற்காக? தளபதி விஜயின் அடுத்த மூவ் என்ன?
கடந்த சில வருடங்களாகவே, நடிகர் விஜய் அரசியலில் மிக விரைவில் இறங்கப் போகிறார் என்பதற்கான பல விஷயங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தில் வெகு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு மாணவர்களை அவர் சந்தித்தது மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இருந்து சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி, சால்வை அணிவித்து சுமார் 13 மணி நேரம் தொடர்ச்சியாக மாணவர்களுடன் இணைந்து அவர் உரையாடியது, ஏற்கனவே அவருக்கு இருக்கும் புகழை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றது என்றால் அது மிகையல்ல.
முதலாம் தலைமுறை வாக்காளர்களை விஜய் ஈர்த்து வருகிறார் என்கின்ற செய்தியும் அவ்வப்பொழுது வெளியானது. இந்நிலையில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவர் கடந்த இரு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி இருந்த ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
இதில் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அவர், முதலில் அவரவர்கள் தங்கள் குடும்பத்தை நல்ல விதத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாணவர்களுக்காக இலவச பாடசாலை அராமிப்பது குறித்தும் அவர் இயக்க நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு அளிக்கப்பட்டு, அவர்களோடு புகைப்படம் எடுத்துள்ளார் விஜய்.
இதில் அவருடைய அரசியல் நுழைவு குறித்து ஏதும் பேசப்பட்டதா?, மாணவர்கள் நலனுக்காக என்னென்ன செய்யலாம் என்ற அனைத்தையும் விஜயின் அனுமதி பெற்றபின் வெளியிடப்படும் என்று நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
